பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தல் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு பின்பு நேற்று (04.07.2024) நடைபெற்றது. மொத்தம் 650 மக்களவை இடங்கள் இருக்கும் நிலையில் பெரும்பான்மை வெற்றி பெற 326 தொகுதிகள் வேண்டும் என்ற நிலை உள்ளது. இத்தகைய சூழலில் இன்று (05.07.2024) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தொழிலாளர் கட்சி 411க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 121 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வி அடைந்துள்ளது.
இதனால் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக்கின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த பெரும் பின்னடைவு அக்கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதற்கிடையே பிரதமராக புதிதாக பதவியேற்க உள்ள கியர் ஸ்டார்மருக்கு ரிஷி சுனர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து பிரதமர் பதவியையும், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியையும் ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால் பிரதமர் பதவியையும் ரிஷி சுனக் இழந்தார். மேலும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று வாக்காளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தனது கடைசி உரையை டவுனிங் தெருவுக்கு வெளியே ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டிற்கு நான் முதலில் மன்னிபபு கேட்க விரும்புகிறேன். நான் இந்த பணிக்காக என் அனைத்தையும் அர்ப்பணித்துள்ளேன். ஆனால் நீங்கள் இங்கிலாந்து அரசாங்கம் மாற வேண்டும் என நினைத்துள்ளீர்கள். இந்த தீர்ப்பு உங்களுடையது என்று தெளிவான சமிக்ஞையை அனுப்பியுள்ளீர்கள். இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்” என உருக்கமாக பேசியுள்ளார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள ரிஷி சுனக் இந்தியத் தொழிலதிபர் நாராயணமூர்த்தியின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.