Skip to main content

"குழந்தைகளை விட்டுவிடுங்கள்; அவர்களுக்கு பதிலாக என்னை சுடுங்கள்" - இராணுவத்தின் முன் மண்டியிட்ட கன்னியாஸ்திரி!

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

MYAMAR NUN

 

மியான்மர் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு, ஆங் சான் சூகி உள்ளிட்டோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த நாட்டில் ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்ட ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்குமாறும் அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

போராட்டங்களை ஒடுக்க, 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தைக் கொண்டுவந்துள்ள மியான்மர், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகளை மட்டுமின்றி துப்பாக்கி சூடும் நடத்தி வருகிறது.

 

இராணுவத்தின் தாக்குதலினால், மக்கள் தொடர்ந்து பலியாகி வரும் நிலையில், குழந்தைகளைக் காக்க கன்னியாஸ்திரி ஒருவர், தன் உயிரை தியாகம் செய்ய முன்வந்துள்ளார். மியான்மரின் மைட்கினா நகரில் போராடிக்கொண்டிருந்தவர்களை இராணுவம் சுற்றி வளைத்துள்ளது. அந்தப் போராட்டத்தில் குழந்தைகளும் இருந்துள்ளனர். இராணுவம் தாக்குதல் நடத்த தயாரானதைப் பார்த்த கன்னியாஸ்திரி ஆன் ரோஸ் நியூட் டாங், இராணுவத்தின் முன் மண்டியிட்டு, “குழந்தைகளைச் சுடுவதற்கு, சித்திரைவதை செய்வதற்குப் பதிலாக என்னை சுட்டுக்கொல்லுங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான படங்களும், விடீயோக்களும் உலகம் முழுவதும் தற்போது பரவி வருகிறது.

 

இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அந்தக் கன்னியாஸ்திரி, "நான் மண்டியிட்டு குழந்தைகளை சுடாதீர்கள். சித்திரவதை செய்யாதீர்கள். அதற்குப் பதிலாக என்னை சுடுங்கள்" என்று கேட்டேன் என கூறியுள்ளார். அப்போது இரண்டு இராணுவ வீரர்கள் கன்னியாஸ்திரி முன் மண்டியிட்டு "போராட்டத்தை நிறுத்த நங்கள் இதை செய்ய வேண்டும். இங்கிருந்து நகர்ந்துவிடுங்கள்" எனக் கூறியுள்ளனர்.

 

இதன்பிறகு சற்று நேரத்தில், கன்னியாஸ்திரி தாக்குதல் நடத்த வேண்டாம் என மன்றாடிக்கொண்டிருக்கும்போதே ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. "குழந்தைகள் பயந்து முன்னால் ஓடினார்கள். குழந்தைகளைக் காப்பாற்றுமாறும், அவர்களுக்கு உதவுமாறும் கடவுளை வேண்டிக்கொண்டிக்கொள்வதை தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை" என அந்த தருணங்களை விவரிக்கிறார் கன்னியாஸ்திரி.

 

கன்னியாஸ்திரி முன்பே ஒருவர், தலையில் சுடப்பட்டு விழுந்துள்ளார். அப்போது "உலகம் நொறுங்குவதைப் போல் இருந்தது. நான் அவர்களிடம் மன்றாடும்போதே இது நடந்தது துயரமளிக்கிறது" என கன்னியாஸ்திரி தனது மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார். குழந்தைகளுக்குப் பதிலாக என்னை சுடுங்கள் என இரஞ்சிய கன்னியாஸ்திரியின் செயல், பலரது நெஞ்சை தொட்டாலும், சர்வாதிகாரத்திற்கு நெஞ்சம் என்ற ஒன்று இல்லை என்பதே வேதனை.

 

 

சார்ந்த செய்திகள்