Skip to main content

இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே! 

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

Gotabaya Rajapakse escaped from Sri Lanka to the Maldives!

 

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார். 

 

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை கொழும்புவில் பிரம்மாண்ட போராட்டம் தொடங்கிய நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மாளிகையை விட்டு குடும்பத்துடன் தலைமறைவானார். அவர் எங்கிருக்கிறார் என்பதும் தெரியாமல் இருந்து வந்தது. 

 

இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, அவரது மனைவி மற்றும் இரு பாதுகாவலர்கள் ஆகிய நான்கு பேரும் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக ராணுவ விமானத்தில் ஏறி தப்பிச் சென்றனர். அதிபர் உள்பட நான்கு பேரும் மாலத்தீவுக்கு சென்றுள்ளது தெரிய வந்தது. 

 

அதிபர் கோத்தபய ராஜபக்சே சென்ற விமானம் மாலத்தீவு தலைநகர் மாலேவில் இறங்க அனுமதி கிடைப்பதில் கடைசி நிமிடத்தில் சிக்கல் ஏற்பட்டதாகவும் எனினும், பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அனுமதி கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. கோத்தபய ராஜபக்சே கடந்த திங்கள்கிழமையே துபாய் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் பாஸ்போர்ட் தொடர்பான சிக்கல் ஏற்பட்டதால், அத்திட்டம் நிறைவேறவில்லை எனவும் இலங்கையைச் சேர்ந்த குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கோத்தபய ராஜபக்சே இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ராஜினாமா செய்த பிறகு தனக்கு அதிபருக்குரிய பாதுகாப்பு கிடைக்காது என்பதால், வெளிநாட்டிற்கு அவர் தப்பியுள்ளார். 

 

இதனிடையே, கோத்தபய ராஜபக்சேவைத் திரும்ப அனுப்பக்கோரி மாலத்தீவின் மாலே நகரில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அவர் சிங்கப்பூர் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்