தூய்மை இந்தியா திட்டத்திற்காக பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் என்ற விருதை பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. ஆனால், மனித உரிமைகளை மீறி, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும் கொடூரமான தாக்குதல்களை கண்டுகொள்ளாத மோடிக்கு இந்த விருதை வழங்குவது தவறு என்று ஏராளமான அறிஞர்களும், பில்கேட்ஸ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதையும் மீறி, அவருக்கு இந்தவிருது வழங்குவது உறுதி என்று பில்கேட்ஸ் அறக்கட்டளை அறிவித்தது. இதையடுத்து, இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு சில மணிநேரம் முன்பாக நிறுவனத்தின் தகவல் தொடர்பு ஸ்பெஷலிஸ்ட்டான ஷாபா ஹமித் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
காஷ்மீரில் தகவல் தொடர்புகளை 50 நாட்களாக துண்டித்திருக்கும் மோடிக்கு இந்த விருதை கொடுக்கக்கூடாது என்று நிர்வாத்திடம் கூறினேன். ஆனால், இந்த முடிவை மாற்ற முடியாது என்று கூறினார்கள். எனவே, காஷ்மீரி என்ற வகையில் எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தேன் என்றார் ஷாபா ஹமித்.
மோடிக்கு இந்த விருது வழங்கப்படுவதை எதிர்த்து ஐரிஷ் நாட்டு நோபல் விருதாளர், ஈரான், ஏமன் நாடுகளைச் சேர்ந்த நோபல் விருதாளர்கள் கடிதம் எழுதினார்கள். பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருலட்சம் கையெழுத்துகளைப் பெற்று முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.