இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்கே, இன்று (16/05/2022) மாலை முதன்முறையாக தொலைக்காட்சி மற்றும் காணொளி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அவர் கூறியதாவது, "நாட்டைக் காப்பாற்ற மிகப்பெரிய சவாலை ஏற்றுள்ளேன்; எனக்கு நேரம் கொடுங்கள். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. என்னிடம் கைப்பிடி இல்லை, என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன். அனைத்து எரிபொருள் விற்பனையிலும் அரசுக்கு இழப்பு; ஒரு யூனிட் மின் விநியோகத்திலும் இழப்பு 30 ரூபாய். எரிவாயு இறக்குமதிக்கு தேவைப்படும் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டுவது கடினமாக உள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக மருந்து இறக்குமதிக்கான தொகையை அரசு செலுத்தவில்லை. வரும் இரண்டு மாதங்கள் நமது வாழ்வில் மிகவும் கடினமானதாக இருக்கும். எதிர்காலத்தில் சலுகைகள் கொண்ட வரவு செலவு திட்டத்தை அரசு முன் வைக்கும். நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் மே 19, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 2 டீசல் கப்பல்களும், மே 18, மே 29 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வரவுள்ளன. இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது". இவ்வாறு இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் பிரதமரின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசுக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.