Skip to main content

'டைம்' இதழ் கௌரவித்த 15 வயது சிறுமி கீதாஞ்சலி... சாதித்தது என்ன..?

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

gitanjali rao selected as time kid of the year

 

 

15 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதாஞ்சலி ராவுக்கு “Kid of the year’ என்ற பட்டத்தைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது டைம் இதழ். 

 

உலகப்புகழ் பெற்ற டைம் இதழ் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பித்து வருகிறது. அந்தவகையில் 2020 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்கள் குறித்த விவரங்களை டைம் வெளியிட்டு வருகிறது. இதில் அமெரிக்காவின் இளம் விஞ்ஞானியாக அறியப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 வயதான கீதாஞ்சலி ராவுக்கு “Kid of the year’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளதோடு, அட்டைப்படத்திலும் அவரை இடம்பெறச் செய்து கௌரவித்துள்ளது. “Kid of the year’' பட்டத்தை முதன்முறையாக டைம் இதழ் இந்த ஆண்டு அறிமுகப்படுத்திய சூழலில், இதனைக் கீதாஞ்சலி ராவ் வென்றுள்ளார். 

 

இணையத்தில் பயனர்களுக்கு எதிராக வரும் அச்சுறுத்தல்களை (cyber bullying) கண்டறியும் செயலி, தண்ணீரின் சுத்தத்தை அறிந்து கொள்ளும் வகையிலான செயலி ஆகியவற்றைக் கண்டறிந்த கீதாஞ்சலி, உலகெங்கிலும் உள்ள சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் இளம் கண்டுபிடிப்பாளர்களை ஒருங்கிணைத்து டிஜிட்டல் சமூகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். டைம் இதழின் இந்த இடத்துக்காக சுமார் 5,000 பேர் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இந்த பட்டத்தை கீதாஞ்சலி வென்றுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊக்கத்தொகையை பகிர்ந்தளித்த விஞ்ஞானி வீரமுத்துவேல்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

Scientist veeramuthuvel who distributed the incentive

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை திட்டங்களுக்கு முக்கிய பங்காற்றிய தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குத் தமிழக அரசு சார்பில், ‘ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் பாராட்டு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி (02.10.2023) நடைபெற்றது. இந்த விழாவிற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றினார்.

 

இந்த விழாவில் தமிழக விஞ்ஞானிகளான கே. சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வி. நாராயணன், ஏ. இராஜராஜன், எம். சங்கரன், ஜெ. ஆசிர் பாக்கியராஜ், மு. வனிதா, நிகார் ஷாஜி மற்றும் ப. வீரமுத்துவேல் ஆகிய 9 பேருக்கும் தமிழக அரசு சார்பில் தலா 25 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கி பாராட்டி கவுரவிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் சந்திரயான் 3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை தான் படித்த 4 கல்லூரிகளுக்குப் பிரித்து வழங்கினார். அதன்படி தான் படித்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி, தனியார் பொறியியல் கல்லூரி, திருச்சி என்ஐடி, சென்னை ஐஐடி என 4 கல்வி நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகையை சமமாக பிரித்து வழங்கினார். 

 

 

Next Story

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இஸ்ரோ தலைவர் நன்றி

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

ISRO chief thanked Chief Minister M.K.Stalin

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை திட்டங்களுக்கு முக்கிய பங்காற்றிய தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குத் தமிழக அரசு சார்பில், ‘ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் பாராட்டு விழா கடந்த 2 ஆம் தேதி (02.10.2023) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றி இருந்தார்.

 

இந்த விழாவில் தமிழக விஞ்ஞானிகளான கே. சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வி. நாராயணன், ஏ. இராஜராஜன், எம். சங்கரன், ஜெ. ஆசிர் பாக்கியராஜ், மு. வனிதா, நிகார் ஷாஜி மற்றும் ப. வீரமுத்துவேல் ஆகியோர் தமிழக அரசு சார்பில் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில் “விண்வெளி துறையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும். தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் ஒன்பது பேரும் தங்களது உழைப்புக்கான அங்கீகாரமாகக் கருதி இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்” எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும், “7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் பொறியியல் படித்த மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் உதவித்தொகை வழங்கப்படும்” எனவும் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா நடத்தியதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இஸ்ரோ தலைவர் சோம்நாத் சென்னையில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “சந்திராயன் உள்ளிட்ட திட்டங்களுக்கு பங்களித்த தமிழக விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறினேன். சிறிய ரக ராக்கெட்களை ஏவுவதற்காக குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளத்தை அமைப்பதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.