ஐரோப்பாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதனையொட்டி கரோனா மரணங்களும் அதிகரித்துவருகின்றன. தற்போது முதல் மார்ச் 1ஆம் தேதிவரை ஐரோப்பாவில் 7 லட்சம் பேர் கரோனாவால் உயிரிழக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இந்தச் சூழலில் கரோனாவை சிறப்பாக கையாண்ட உலகின் சில நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில், கரோனாவின் நான்காவது அலை தீவிரமாகிவருகிறது. அந்த நாட்டில் தினசரி கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 73 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கரோனா முதன்முதலில் பரவ தொடங்கியதிலிருந்து அந்தநாட்டில், ஒரேநாளில் இத்தனை பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதியாவது இதுவே முதன்முறையாகும்.
ஜெர்மனியில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதற்கு பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததே காரணம் என கூறப்படுகிறது. இந்தநிலையில், ஜெர்மனியில் முழு ஊரடங்கு விதிப்பது குறித்தும், தடுப்பூசியைக் கட்டாயமாக்குவது குறித்தும் அந்நாட்டு அரசு ஆலோசித்துவருகிறது.
அண்மையில் ஜெர்மனியின் சுகாதாரத்துறை அமைச்சர், குளிர்காலம் முடியும்போது ஜெர்மனியில் உள்ள ஒவ்வொருவரும் ஒன்று தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பார்கள் அல்லது கரோனாவிலிருந்து மீண்டிருப்பார்கள் அல்லது இறந்திருப்பார்கள் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.