ஐரோப்பா முழுவதும் இந்த கோடைகாலத்தில் கடும் வெயில் வாட்டிவதைத்து வந்த நிலையில், வெயில் கொடுமை தாங்காமல் பிரான்ஸ் நாட்டில் 1435 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பிரான்ஸ் வரலாறு காணாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது. அனல்காற்றுடன் சேர்த்து 46 டிகிரி செல்சியஸ் வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் அந்நாட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்ததோடு, பொது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
ஆனாலும் இந்த கோடைகாலத்தில், வெயிலின் தாக்கத்தால் மட்டும் 1435 பேர் பிரான்ஸ் நாட்டில் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஆக்னஸ் புசின் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் வெயிலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஐரோப்பா முழுவதும் கடுமையான வெப்பம் நிலவிய நிலையில் பிரான்ஸ் நாட்டை தவிர வேற எந்த நாடும் பலி எண்ணிக்கை குறித்து அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.