Skip to main content

2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு ட்ரம்ப் மீண்டும் என்ட்ரி 

 

Former US President Trump's social media accounts have been unbanned

 

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் சமூக வலைதளக் கணக்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 2 ஆண்டுகளுக்குப்  பிறகு நீக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் குடியரசுக் கட்சி சார்பாக மீண்டும் ட்ரம்ப் போட்டியிட்டு, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்காவின் கேப்பிட்டல் கட்டடத்தில் உள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இது அமெரிக்க வரலாற்றில் கருப்பு நாளாகக் கருதப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களை ட்ரம்ப்  தனது சமூக வலைதளப் பக்கங்களில் பாராட்டியிருந்தார். இதற்கு சமூக வலைதளங்களின் மூலம் மக்களின் மத்தியில் வெறுப்பை விதைத்தாக கூறி ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் ட்ரம்ப்பின் கணக்குகளுக்குத் தடை விதித்தது. 

 

இந்நிலையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ட்ரம்ப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மெட்டா நிறுவனம் நீக்கியுள்ளது. இது குறித்து பேசிய மெட்டா சர்வதேச விவகாரங்களின் தலைவர் நிக் க்ளெக், “2021 அமெரிக்க கலவரத்திற்குப் பின்னர் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதற்கான தடை நீக்கப்படுகிறது. இருப்பினும் சில விதிமுறைகளும் விதிக்கப்படுகின்றன. மீண்டும் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் ஒவ்வொரு விதிமீறலுக்கும் இரண்டாண்டுகள் தடை விதிக்கப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார். 

 

இதனிடையே எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு கடந்த அண்டு நவம்பர் மாதம் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கிற்கான தடை நீக்கப்பட்டது. ஆனால், ட்ரம்ப் இன்று வரை ஒரு ட்விட்டர் பதிவும் கூட வெளியிடவில்லை. ட்ரம்பின் சமூக வலைதளக்கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டபோது ட்ரூத் என்று தனியாக ஒரு சமூக வலைதளத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !