ஜப்பானைச் சேர்ந்த கோடீஸ்வரரான யூசகு மேஸவா, தனது ட்வீட்டை ரீட்வீட் செய்தவர்களில் 1000 பேரை தேர்ந்தெடுத்து தலா ரூ. 6.50 லட்சம் பரிசாக கொடுத்திருக்கிறார்.
ஜப்பானின் பிரபல பேஷன் ஆன்லைன் நிறுவனமான ஜோஜோடவுனின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர்தான் யூசகு. இவர் பல கலைநய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குவது, கோடிக்கணக்கில் ஸ்போர்ட்ஸ் ரக கார்களை வாங்கி சேர்ப்பதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தவர்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க் தன்னுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் நிலாவுக்கு ட்ரிப் கூட்டிக்கொண்டு போவதற்கு பல கோடிகளை கொடுத்து முன்பதிவு செய்தவர் யூசகு. இப்படி பல வித்தியாசமான அணுகுமுறைகளால் மக்கள் மத்தியில் பிரபலமடையும் யூசகு, மீண்டும் ஒரு புதிய விஷயத்தின் மூலம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஜனவரி 1ஆம் தேதி தான் பதிவிடும் ட்வீட்டை ரீட்வீட் செய்பவர்களில் 1000 பேரை தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தலா 6.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 1000 பேரும் 7 ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என்று அந்த ட்வீட்டிலும் தெரிவித்திருந்தார்.
மேலும் ஏன் இவ்வாறு தான் செய்கிறேன் என்பதை யூ-ட்யூப் வீடியோ மூலம் தெரிவிப்பதாக கூறியவர். அந்த வீடியோவில், இந்தப்பணம் அந்த குறிப்பிட்ட நபர்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக்கிறது என்பதை அறியும் முயற்சி. இந்த பணத்தின் தாக்கம் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.