/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modiabuthabi-ni.jpg)
பிரதமர் மோடி இரண்டுநாள் அரசுப் பயணமாக நேற்று (13-02-24) ஐக்கிய அரபு அமீரகம் (அபுதாபி) சென்றார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அவர் அபுதாபிக்கு சென்றார். அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் முகமது பின் சயீத் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதன் பின்பு, இன்று (14-02-24) மதியம் அங்கு நடைபெறும் உலக உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். இதனையடுத்து, இன்று மாலை பி.ஏ.பி.எஸ். அமைப்பு சார்பில்பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோவில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், கோவிலுக்குள் சென்று கட்டுமானங்களை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார். இதன் பிறகு, மஹந்த் சுவாமி மகராஜ் சிறப்பு பூஜைகள் செய்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். அதற்கு முன்னதாக, அபுதாபி இந்து கோவிலில் காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
அபுதாபி சுவாமி நாராயண் கோவில் வட இந்தியர்களின் நாகரா பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், இந்தியா-ஐக்கிய அரபு அமீரகத்தின் கலையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி, அபுதாபிக்கு சென்றிருந்தபோதுஅதிபர் முகமது பின் சயீத், அபுதாபியில் இந்து கோவிலைக் கட்ட 13.5 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்தார். இத்துடன், கூடுதலாக 13.5 ஏக்கர் நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு தானமாகக் கொடுத்தது. இதையடுத்து, மொத்தம் 27 ஏக்கர் நில பரப்பளவில் சுவாமி நாராயண் கோவில் என்ற இந்து கோவிலைக் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)