உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்திலிருந்த நிலையில் படிப்படியாக பாதிப்புகள் குறைந்து ஊரடங்கு அறிவிப்புகள் பின்வாங்கப்பட்டு வருகிறது. அதேபோல் நாடுகளுக்கு இடையேயான விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளது. தடுப்பூசி என்ற ஆயுதத்தின் மூலம் இவை சாத்தியமாகி கொண்டிருக்கும் நிலையில் வடகொரியாவில் தற்பொழுது கரோனா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக வடகொரியாவில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். முதன்முறையாக உறுதி செய்யப்பட்ட கரோனா தொற்று ஒமிக்ரான் வகையை சேர்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே கரோனா தொற்று பரவலை தடுக்க வடகொரியா தனது எல்லைகளை மூடியதால் உணவு பஞ்சத்தில் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. குறிப்பாக அங்கு ஒரு கிலோ வாழைப்பழம் 45 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரம் ரூபாய்க்கு) விற்கப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், உணவு பஞ்சத்திற்கு மத்தியில் இந்த ஊரடங்கை வடகொரியா எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது.