Skip to main content

மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் மார்பர்க் வைரஸின் முதல் பாதிப்பு - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

marburg virus

 

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் மார்பர்க் வைரஸின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எபோலா வைரஸ் போன்ற கொடிய வைரஸான இந்த மார்பர்க் வைரஸின் பாதிப்பு இதற்கு முன்பு ஏற்கனவே தென்னாப்பிரிக்கா, அங்கோலா, கென்யா, உகாண்டா, காங்கோ ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டிருந்தாலும் மேற்கு ஆப்ரிக்காவில் கண்டறியப்படுவது இதுவே முதல்முறை.

 

கினியா நாட்டில் ஜூலை 25ஆம் தேதி ஒருவருக்கு அதிக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சில நாட்களுக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த நபர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடற்கூறாய்வு மாதிரிகளை ஆய்வு செய்ததில், அவருக்கு மார்பர்க் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

 

இந்த மார்பர்க் வைரஸ் வௌவால்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் என்பதும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் 88 சதவீதம் உயிரிழப்பு உறுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், மார்பர்க் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் உமிழ் நீர், வியர்வை, சிறுநீர் மூலம் இந்த வைரஸ் வேறு ஒருவருக்குப் பரவும். அதுமட்டுமின்றி, மார்பர்க் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்திய இடத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் இந்தத் தொற்று பரவும். அதிக காய்ச்சல், கடும் தலைவலி, உடல் அசதி, அசௌகரியம் ஆகியவை இந்த வைரஸின் அறிகுறிகளாகும்.

 

இந்த மார்பர்க் வைரஸ் பெரிய அளவில் பரவ வாய்ப்பிருப்பதால், அதன் பரவலை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மேலும், மார்பர்க் வைரஸ் பரவும் ஆபத்து நாட்டளவிலும், பிராந்திய அளவிலும் அதிகமாக இருப்பதாகவும், உலக அளவில் குறைவாக இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காசாவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை கொல்லப்படுகிறது” - உலக சுகாதார நிறுவனம் வேதனை 

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

WHO President says about Gaza

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல், கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கு இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

 

இந்த நிலையில், காசாவின் அவலநிலை குறித்து உலக சுகாதாரம் நிறுவனம் தனது வேதனையை தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்டோஸ் அதானோம் கூறியிருப்பதாவது, “காசாவில் அனஸ்தீசியா (Anaesthesia) கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை நடைபெறுகின்றன. உயிரிழந்தவர்களில் 70% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த நிலையை எடுத்துரைக்க என்னால் இயலவில்லை. சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது” என்று வேதனையோடு தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

குரங்கு அம்மை நோயின் பெயரை மாற்ற உலக சுகாதார அமைப்பு பரிசீலனை!

Published on 14/08/2022 | Edited on 14/08/2022

 

The World Health Organization is considering changing the name of monkey measles!

 

குரங்கு அம்மை நோயின் பெயரை மாற்ற பரிசீலித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த வைரஸ் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. மனிதருக்கு இந்த வைரஸ் பாதிப்பு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டுமுதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்பொழுது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றில் அண்மையில் புதிதாக இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 12 நாடுகளில் பரவியுள்ளது.

 

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை நோய் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'குறிப்பிட்ட வகை வைரஸ் தாக்குவதால் ஏற்படும் நோயை 'குரங்கு அம்மை' வைரஸ் என்று அழைப்பதற்கு எதிர்ப்பு மற்றும் கவலை தெரிவிக்கப்படுகிறது. குரங்கின் பெயரை பயன்படுத்துவது அவதூறு மற்றும் இன ரீதியான குறிப்பு. இதற்கு முன் இந்த நோய் காங்கோ பேசின் என அழைக்கப்பட்டது. இனி இந்த வைரஸ் தாக்குதலை க்லேட் 1, க்லேட் 2 என அழைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த மே மாதம் முதல் உலகம் முழுவதும் இதுவரை 36 ஆயிரம் பேருக்கு இவ்வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.