கரோனா வைரஸை சுமந்து செல்லும் துகள்கள், நினைத்ததை விட நீண்ட நேரம் காற்றில் இருக்கக்கூடும் என பின்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.8 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் 7000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 200 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்த கரோனா வைரஸ், தும்மல் மற்றும் இருமலின்போது, ஏற்படும் நீர்த்துளிகள் வழியாக பரவுவதை ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த கிருமியை உடைய நீர்த்துளிகள் ஏதாவது ஒரு பொருளின் மீது விழுந்து, அதனை மற்றவர்கள் தொட்டால் அவர்களுக்கும் இந்த வைரஸ் தோற்று பரவும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கரோனா வைரஸை சுமந்து செல்லும் துகள்கள், நினைத்ததைவிட, நீண்ட நேரம் காற்றில் இருக்கக்கூடும் என பின்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
3டி தொழில்நுட்பத்துடன் பின்லாந்து விஞ்ஞானிகள் உருவாகியுள்ள ஒரு மாதிரி காணொளியில், கரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும்போது, அதிலிருந்து வெளிப்படும் படலம், ஒரு மேகம் போல அந்த இடத்தில் சூழ்கிறது. பின்னர் அது காற்றிலிருந்து மறைய சில நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. எனவே ஒரு நபர் ஒரு இடத்தில தும்மிவிட்டு நகர்ந்தாலும், அந்த தும்மல் இருந்து வெளியான நீர்படலத்தில் கிருமிகள் சில நிமிடங்கள் வரை காற்றிலேயே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மிவிட்டு நடந்து செல்லும்போது , அப்பகுதிக்கு வேறு யாரும் வந்தால், வைரஸ் அடங்கிய ஏரோசல் துகள்கள் மற்றவரின் சுவாசக் குழாயினுள் செல்லலாம்" என பின்லாந்தின் ஆல்டோ பல்கலைக்கழக இணை பேராசிரியர் வில்லே வூரினென் தெரிவிக்கிறார்.