Zoom வீடியோ காலிங் செயலிக்குப் போட்டியாகப் புதிய வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஐ.டி துறையில் பணியாற்றும் பெரும்பாலானார் வீட்டிலிருந்தே பணிபுரியும் சூழல் இன்று உருவாகியுள்ளது. அப்படி வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்கள் பலரும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் மற்றவர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் தொடர்புகொள்ள Zoom செயலியைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அண்மையில் இதன் பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்ட சூழலில், பல நிறுவனங்களும் இந்தச் செயலின் பயன்பாட்டைத் தடை செய்து வருகின்றன. இந்நிலையில், Zoom வீடியோ காலிங் செயலிக்குப் போட்டியாகப் புதிய வசதியை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
Messenger Rooms எனும் இந்த வசதியின் மூலம் ஒரே நேரத்தில் 50 பேருடன் வீடியோ கால் மூலமாகப் பேச முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வீடியோ காலின் போது பல்வேறு ஃபில்டர்கள் மற்றும் பின்புல படங்களை மாற்றிக்கொள்ளவும், நமது News Feed -ல் பதிவுகளை இடவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வசதி பெருநிறுவனங்கள் முதல் தனிப்பட்ட நபர்களின் வீடியோ சாட்டிங் வரை அனைத்து தரப்பிற்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் இந்தச் சேவை ஃபேஸ்புக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக்கின் இந்தப் புதிய அறிவிப்பு அதன் பயனாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.