இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் தீவிரமடைந்துவரும் சூழலில், பல்வேறு நாடுகள், இந்தியாவிலிருந்து மக்கள் தங்கள் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளத் தடை விதித்து வருகின்றன. அந்தவகையில், அமெரிக்காவும் தங்கள் நாட்டு குடிமக்கள் யாரும் இந்தியாவிற்குச் செல்ல வேண்டாம் என்றும், இந்தியாவில் இருந்தால் உடனடியாக வெளியேறும்படியும் அறிவுறுத்தியது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் அத்தியாவசியமற்ற பயணங்களை நிறுத்துமாறு தனது ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளை ஐரோப்பிய ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. கரோனா பரவலைத் தடுப்பதற்காக இந்த தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, ஒன்றிய நாடுகளை ஐரோப்பிய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
உலக சுகாதார நிறுவனம், முதன் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட மரபணு மாற்றமடைந்த கரோனாவை, 'கவலை தரும் மாற்றமடைந்த கரோனா வைரஸ்' பட்டியலில் இணைப்பதற்கான முன்மொழிவை வெளியிட்டதையொட்டி, இந்த அறிவுறுத்தல் மேற்கொள்ளப்பட்டதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.