உலகிலேயே கரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட கண்டங்களில் ஒன்றாக ஐரோப்பா இருந்து வருகிறது. இந்தச்சூழலில் அண்மைக்காலமாக அக்கண்டத்தில் மீண்டும் கரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பா கண்டத்தின் இயக்குநரான ஹான்ஸ் க்ளூக், ஐரோப்பா கண்டத்தில் உள்ள 53 நாடுகளில் கரோனா பரவும் வேகம் மிகுந்த கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், ஐரோப்பாவில் கடந்த வாரத்தில் பதிவான கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையை விட 6 சதவீதம் அதிகமாக இந்த வாரம் பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும் "ஒட்டுமொத்தமாக, கடந்த நான்கு வாரங்களில், தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. எனவே ஐரோப்பா மீண்டும் கரோனா தொற்றின் மையமாகியுள்ளது" எனத் தெரிவித்துள்ள ஹான்ஸ் க்ளூக், கரோனா தொற்று அதிகரிப்புக்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், குறைவாகத் தடுப்பூசி செலுத்தப்படுவதுமே காரணம் எனவும் கூறியுள்ளார்.