கரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதற்கான ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுப் பரிந்துரைகளில், ஒருவர் தும்மும் போதும், இருமும் போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் விழும் பொருட்களை மற்றொருவர் தொட்டு, அந்தக் கைகளை முகத்தில் தேய்க்கும்போது கரோனா பரவும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தும்மல் மற்றும் இருமலின் போது வெளிவரும் நுண்துகள்கள் காற்றில் பரவி, அதனைச் சுவாசிப்பவருக்கும் இந்த வைரஸ் பரவும் வாய்ப்புள்ளது எனச் சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், இதற்கு ஏற்றாற்போல வழிகாட்டுப் பரிந்துரைகளை மாற்ற வேண்டும் என உலக சுகாதார அமைப்பிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கடிதம் எழுதினர். காற்றில் மூலம் கரோனா வைரஸ் பரவும் என்பது குறித்த ஆய்வுக் கட்டுரையை 32 நாடுகளைச் சேர்ந்த 239 அறிவியல் ஆய்வாளர்கள் அடுத்த வாரம் வெளியிட உள்ள சூழலில் உலக சுகாதார அமைப்பிற்கு இந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் கரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதற்கான ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோய்க்கான தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், "கரோனாவைப் பரப்பும் முறைகளில் ஒன்றாகக் காற்றின் மூலம் பரவுதல் மற்றும் ஏரோசல் பரவுதல் பற்றி பரிந்துரைகளை வழங்க நாங்கள் ஆலோசித்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெனீவாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தொழில்நுட்ப தலைவர் பெனடெட்டா அலெக்ரான்ஸி, "கரோனா வைரஸின் காற்றுவழி பரவுவதற்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளன, ஆனால் அது உறுதியானதாக இல்லை. பொது இடங்களில் கரோனா காற்றுவழியாக பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் - குறிப்பாக மிகவும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில், நெரிசலான, மூடிய, மோசமான காற்றோட்டம் கொண்ட அமைப்புகளில் இது நடைபெற வாய்ப்புள்ளது என்பதை நிராகரிக்க முடியாது. இதுகுறித்து மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.