அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று முன்தினம்(05-11-24) நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் போது, இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான அதிக இடங்களை பெற்று இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 538 எலெக்ட்ரோல் வாக்குகளில் 270 வாக்குகள் பெற்றால் வெற்றி எனும் பட்சத்தில், டொனால்ட் டிரம்ப் 295 வாக்குகள் பெற்று அமெரிக்காவின் 47வது அதிபராகிறார்.
இந்த தேர்தல் பிரச்சாரங்களுக்கு பெரும் நிதி தேவைப்பட்டதால், பல முன்னணி தொழிலதிபர்களை டொனால்ட் டிரம்ப் சந்தித்து நிதியுதவி கோரி வந்தார். அதன்படி, உலகின் பெரும் பணக்காரருமான டெஸ்லா சி.இ.ஏ எலான் மஸ்க்கையும், டொனால்ட் டிரம்ப் சந்தித்து நிதியுதவி கேட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, எலாக் மஸ்க்கும், டொனால்ட் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்தார். மேலும், டொனால்ட் டிரம்ப்பை ஆதரித்து நேரடி பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் செலவுக்காக, எலான் மஸ்க் ரூ.1000 கோடி செலவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டொனால்ட் டிரம்ப்பின் இந்த வெற்றிக்குப் பிறகு, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு அதிகப்படியாக உயர்ந்துள்ளது. அதாவது, எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 26.5 பில்லியன் டாலர் (ரூ.1.68 லட்சம் கோடி) அதிகரித்து 290 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன்மூலம், அவரது சொத்து மதிப்பு 7.73 சதவீதம் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.