Skip to main content

‘பூனை பெண்கள்’ சர்ச்சை; “வெற்றி பெற்றால் குழந்தை தருகிறேன்” - எலான் மஸ்க் கருத்தால் பரபரப்பு 

Published on 11/09/2024 | Edited on 11/09/2024
Elon Musk comments against Cat Lady and Taylor Swift

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், அதிபர் தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலக,  ஜனநாயகக் கட்சி சார்பாக தற்போதைய துணை அதிபரும், ஆப்ரிக்க - இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பைடன் வேட்பாளராக இருந்த போது ட்ரம்பின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது கமலா ஹாரிஸுக்கு எதிரான தேர்தலில் ட்ரம்புக்கு நெருக்கடி இருப்பதாக அமெரிக்க அரசியலை உற்றுநோக்கும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, பிரச்சாரங்களும், விவாதங்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவருக்கும் பல்வேறு பிரபலங்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில்,  பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு  வாக்களிக்கப்போவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “2024 அதிபர் தேர்தலில் நான் கமலா ஹாரிஸுக்கு வாக்களிப்பேன், ஏனென்றால் அவர் உரிமைகளுக்காகப் போராடுகிறார். அவற்றை வென்றெடுக்க ஒரு போர்வீரர் தேவை என்று நான் நம்புகிறேன்.  கமலா ஹாரிஸ் ஒரு உறுதியான, திறமையான தலைவர் என்று நான் நினைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taylor Swift (@taylorswift)

இந்த நிலையில் டெய்லர் ஸ்விஃப்டின் கருத்தை உலக பணக்காரரான எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``நீங்கள் வெற்றி பெற்றால்...நான் உங்களுக்கு ஒரு குழந்தையைத் தருகிறேன்..... மேலும், உங்கள் பூனைகளையும் எப்போதும் பாதுகாப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு, ட்ரம்பின் இப்போதைய துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி.வான்ஸ் கொடுத்த ஒரு பேட்டியில், ஜனநாயகக் கட்சியில் இருக்கும் பெண்கள் ‘பூனை பெண்கள்’(Cat Ladies) எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், பூனைப் பெண்கள் குழந்தைகள் இல்லாததால் தங்களின் வீடுகளைப் பூனைகளுடன் பகிர்ந்து கொள்கிறார்கள் என்றும் கூறியிருந்தார். அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்களையும், ரொமான்ஸாக வாழ்க்கை நடத்தத் தெரியாத பெண்களையும் குறிக்க பூனை பெண்கள்(Cat Ladies) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஜே.டி.வான்ஸின் கருத்து அப்போதே பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது, அதே போன்ற கருத்தை தான் எலான் மஸ்க்கும் கூறியிருக்கிறார் என்று பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் ரசிகர்கள், பெண்கள் ஆதரவாளர்கள், ஜனநாயக கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்