அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், அதிபர் தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலக, ஜனநாயகக் கட்சி சார்பாக தற்போதைய துணை அதிபரும், ஆப்ரிக்க - இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
பைடன் வேட்பாளராக இருந்த போது ட்ரம்பின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது கமலா ஹாரிஸுக்கு எதிரான தேர்தலில் ட்ரம்புக்கு நெருக்கடி இருப்பதாக அமெரிக்க அரசியலை உற்றுநோக்கும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, பிரச்சாரங்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவருக்கும் பல்வேறு பிரபலங்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள உலக பணக்காரரான எலான் மஸ்க், கமலா ஹாரிஸை கடுமையாகச் சாடி வருகிறார். அதன்படி, பென்சில்வேனியா பகுதியில், ட்ரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் பரப்புரை செய்துள்ளார். அதில் பேசிய எலான் மஸ்க், “நாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்க டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற வேண்டியது அவசியம். ஜனநாயகத்தை பாதுகாக்க இந்த வெற்றி மிகவும் அவசியம். அனைவரும் ட்ரம்பிற்கு வாக்களிக்க வேண்டும். அனைவரும் வாக்களிப்பதை கட்சித் தொண்டர்கள் உறுதிப்படுத்த வேண்டும். ட்ரம்பிற்கு வாக்களிக்காவிட்டால் இதுவே கடைசி தேர்தலாக இருக்கும்” என்று பேசினார்.