கடல் சிங்கங்கள் அதிகப்படியாக உயிரிழப்பது பிரேசிலில் சுகாதார அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஏராளமான கடல் சிங்கங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உயிரிழந்து கிடந்த கடல் சிங்கங்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டு அதன் பாதிப்பின் காரணமாக உயிரிழந்தது தெரியவந்தது.
இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 942 கடல் சிங்கங்கள் பறவை காய்ச்சலால் இறந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும், மற்ற விலங்குகளுக்கும் பரவும் என்பதால் உடனடியாக கடல் சிங்கங்களை புதைக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலானது கடல் சிங்கங்களின் நரம்பு மண்டலத்தினை நேரடியாக தாக்குவதால் உடனடி உயிரிழப்பு ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடல் சிங்கங்கள் மட்டுமல்லாது சில கடற்கரை பகுதிகளில் பென்குயின்களும் உயிரிழந்து கிடப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வைரஸ் பரவல் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக பிரேசில் அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.