கடந்தாண்டு நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், இன்று (20-01-25) காலை 10:30 மணிக்குஅமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார். 2வது முறையாக அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்போடு, ஜே.டி.வானஸ் என்பவர் துணை அதிபராக இன்று பதவியேற்கவுள்ளார்.
உலகின் தலைசிறந்த நாடாக பார்க்கப்படும் அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் விழாவில் உலகெங்கிலும் உள்ள பல தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். டிரம்ப் பதவியேற்கும் விழாவில், தொழிலதிபர்கள் ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர். இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க இருக்கிறார்.
தேநீர் விருந்து, டிரம்ப் உரை, அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெறவுள்ள இந்த பதவியேற்பு விழாவுக்காக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியின் போது டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு வெளிநாட்டு தலைவர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.