ஆப்கனில் தாடி வைத்திருப்போர் அதனை வெட்டவோ அல்லது திருத்தவோ கூடாது என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்துவந்த அமெரிக்கப் படைகள் மீண்டும் தங்கள் நாட்டுக்கு திரும்பியதை அடுத்து, அமைதியாக இருந்துவந்த தலிபான்கள் மீண்டும் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு ஆட்சியைப் பிடித்தனர். தலிபன்களுக்குப் பயந்து அந்நாட்டு அதிபர் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார்.
ஆட்சியைப் பிடித்த அவர்கள், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை தினந்தோறும் அறிவித்துவருகிறார்கள். பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தடை விதித்துள்ளனர். திரைப்படங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்குகள் அனைத்தும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது திடீர் திருப்பமாக ஆப்கானிஸ்தானில் தாடி வைத்திருப்பவர்கள் அதனை வெட்டவோ அல்லது திருத்தவோ கூடாது என உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவு ஆப்கானிஸ்தான் இளைஞர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் என்னென்ன உத்தரவுகளை எதிர்காலத்தில் பிறப்பிப்பார்களோ என்ற அதிர்ச்சியில் அந்நாட்டு மக்கள் இருந்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.