தென்னாப்பிரிக்காவில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கிய ‘பிரிக்ஸ்’ உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமஃபோசா, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா உள்ளிட்ட தலைவர்கள் இதில் ருஷ்ய அதிபர் புதின் காணொளி வாயிலாக பங்கேற்றார். இந்த உச்சிமாநாடு தற்போது நடந்து முடிந்துள்ளது. இதனை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவில் இருந்து கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.
இந்த பிரிக்ஸ் கூட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங்கைச் சந்தித்து உரையாடுவார் என்பது தான். இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட நாட்டின் தலைவர்கள் இறுதியில் கூட்டாய் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதற்காக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின் பிங்கும் செய்தியாளர் சந்திப்பு மேடையை நோக்கி சென்றபோது இருவரும் பேசிக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் பாலியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின்போது சீன அதிபர் ஜி ஜின் பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அதன்பிறகு தற்போது பிரிக்ஸ் மாநாட்டின் இறுதியில் செய்தியாளர்களின் சந்திப்பிற்காக சென்றபோது இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசியுள்ளனர். பொதுவெளியில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் ஓராண்டு கழித்து தற்போது ஒருவரையொருவர் சந்தித்து பேசிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சீன வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் பேரில் ஆகஸ்ட் 23 அன்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது அதிபர் ஜி ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய அதிகாரிகள் தரப்பிலும் தகவல்கள் வந்தன.
இரு தரப்பிலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து பிரச்சனைகள் சீரானது போல தெரிந்தாலும், கிழக்கு லடாக்கில் இந்திய மற்றும் சீனா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சில உரசல்கள் தொடர்கிறது. சமீபத்தில், இந்தியாவும் சீனாவும் ஆகஸ்ட் 13, 14 ஆகிய தேதிகளில் 19வது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தையை நடத்தியது. கிழக்கு லடாக்கில் உள்ள டெப்சாங் மற்றும் டெம்சோக் ஆகிய இடங்களில் நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.