கரோனா பாதிப்பால் உலகமே அஞ்சி வரும் நிலையில், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப முடியாமல் அவதியுறுகின்றனர். இந்தியா திரும்பிய வெளிநாடுவாழ் இந்தியர்களும், அவர்களது வீட்டில் உள்ள யாரும் வெளியே வரக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவர்களது வீடுகளில் முழு விவரம் அடங்கிய நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது.
இவ்வாறாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினரை ஆங்காங்கே கிராம மக்கள், நகர மக்கள் கேலியாக பேசுவதும், புறக்கணிப்பதும் அவதூறாக வாட்ஸ் ஆப், முகநூலிலும் கருத்துகளை பரப்புவதும் கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தி வருவதாக வெளிநாட்டிலிருந்து அண்மையில் திரும்பியவர்கள் கூறுகின்றனர். எனவே அரசு உடனடியாக வெளிநாட்டில் வாழக்கூடிய இந்தியர்கள் அனைவருக்கும், கரோனா நோய்தொற்று காரணமாக பாதிப்படைந்த மற்றும் பாதிப்படைந்து விடுவோமா என்ற அச்சத்தில் உள்ள அனைவருக்கும் உளவியல் மருத்துவர்களைக் கொண்டு மன அழுத்தத்தை போக்கும் வகையில் சிகிச்சை அளிக்கவும், இந்திய தூதரகம் மூலம் அனைத்து நாடுகளிலும் வாழும் இந்தியர்களுக்கு பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுத்து இந்தியர்களை காக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்பதனையும் நினைவூட்டுகிறோம்.
மேலும் அன்றாடம் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் நிலை குறித்து அவர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கரோனா தொற்று குறித்து வரும் செய்திகளை அறிந்து மிகுந்த கவலையுற்றுள்ளனர். மேலும் மருத்துவர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கும் மேலும் அச்சம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. எனவே பாதிக்கப்பட்ட கரோனா நோயாளிகள் வார்டுகளிலும், தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் உள்ள இடங்களிலும், மருத்துவ சேவையாற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியில் தொடர்ந்து பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கும் உளவியல் சார்ந்த ஆலோசனைகளை கட்டாயமாக வழங்க வேண்டிய தேவை உள்ளது.
கரோனா இருக்கலாம் என சந்தேகப்பட்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்பவங்களும் அண்மையில் அரங்கேறியுள்ளது. உதாரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் கேரளாவிலிருந்து திரும்பிய ஒருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டில் பிழைப்புக்காக குடும்பச் சூழல் காரணமாக வேலைக்கு சென்ற இளைஞர்கள் சிலர், தங்களது எண்ணத்தை முகநூல் வழியாக பதிவிட்டுள்ள செய்தி படிப்பவர்களின் நெஞ்சை கணக்கச் செய்து வருகின்றது. இதோ அந்த இளைஞர்கள் மனம் வெதும்பி மனம் நொந்து பதிவிட்டுள்ள செய்தி "உயிர் இருந்தால் வருகிறோம் ஊருக்கு! இல்லாமல் போனால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! அடுத்த தலைமுறையை வெளிநாடுகளுக்கு அனுப்பமாட்டோம்! என்று..... வெளிநாட்டு இளைஞர்கள்" என்று பதிவிட்டுள்ளது மிகுந்த வேதனைக்குரிய மிகுந்த கவனிக்கத் தக்கது.
அவர்களுக்கு தக்க உளவியல் ரீதியான ஆலோசனை வழங்குவதோடு அவர்களுக்கு முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களை வாங்ககூட வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை முககவசம் இல்லாமல் வெளியில் வர கடுமை காட்டி வருகிறார்கள் என வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதை இந்திய தூதரகம் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து சமூக ஆர்வலர்கள் சார்பாக அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.