இலங்கையில் தொடர்ச்சியாக நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டு மக்களின் போராட்டம் நீடித்து வருகிறது. மக்களின் சீற்றத்திற்கு பயந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மாளிகை விட்டு வெளியேறிவிட்டார். நாட்டை விட்டு கோத்தபய ராஜபக்சே தப்பி மாலத்தீவில் தஞ்சமடைந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் நேற்று கோத்தபய ராஜபக்சேவை வெளியேற்ற வேண்டும் என மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் மாளிகையை முற்றுகையிட்ட புலம்பெயர்ந்த இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் தப்பி செல்ல முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஒருபுறம் தகவல்கள் வெளியான நிலையில், மறுபுறம் இலங்கையில் போராட்டம் நீடித்து வருவதால் இன்று பகல் 12 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை ராணுவ வீரர்கள் ராணுவ வாகனங்களில் கொழும்பு நோக்கி அணிவகுத்து ரோந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. போராட்டம், அசம்பாவிதம் தொடராமல் தடுக்கும் வகையில் முக்கிய இடங்களில் ராணுவத்தினர் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.