ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து தேசத்தில் கரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது தாய்லாந்து அரசு. முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு என கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட இந்தக் கட்டுப்பாடுகள், அரசின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடந்த ஒரு பொது நிகழ்வில் கலந்துகொள்ள அந்நாட்டு பிரதமர் பிரயுத்ஜான் ஓச்சா சென்றிருந்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் ஓச்சா, முகக்கவசம் அணியவில்லை. அவரது பாதுகாப்பு அதிகாரிகள் இதனை அவரிடம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும், முகக்கவசம் அணிவதில் கவனம் செலுத்தவில்லை ஓச்சா!
கூட்டத்திற்கு வந்ததிலிருந்து கூட்டம் முடிந்து திரும்பிச் செல்லும் வரை அவர் முகக் கவசம் அணியாததைப் பலரும் கவனித்தபடி இருந்தனர். கூட்டம் முடிந்ததும், கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் ஓச்சா முகக் கவசம் அணியாததைச் சுட்டிக்காட்டி, பாங்காக் மாநிலத்தின் கவர்னர் அஸ்வின் குமார் முவாங்கிற்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் பறந்துள்ளன.
இதனையடுத்து, கரோனா விதிகளைக் கடைப்பிடிக்காததையும் விதிமீறலில் ஈடுபட்டதையும் சுட்டிக்காட்டி பிரதமர் ஓச்சாவுக்கு 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார் கவர்னர் முவாங்! இதற்கான உத்தரவை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.