ஐரோப்பிய நாடுகளில் கரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில வாரங்கள் முதலே ஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் மற்றும் பலி எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸின் இரண்டாம் அலை உருவாகியுள்ளது என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் வேகம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஐரோப்பாவில் பலி எண்ணிக்கையானது 46 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் கடந்த ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் பதிவான கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சரிபாதி நபர்கள் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்தவர்கள்" என்றும் கூறப்பட்டுள்ளது.