கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரிடம் இருந்து 11 நாள்களுக்குப் பின் தொற்று மற்றவர்களுக்குப் பரவுவதில்லை என சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களைப் பாதித்துள்ள நிலையில், இந்த வைரஸ் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. அவ்வாறு சிங்கப்பூரில் நடைபெற்ற ஆராய்ச்சி ஒன்றில் மனிதர்களுக்குச் சிறிய நிம்மதியை அளிக்கும் முடிவு ஒன்று தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரின் தேசிய தொற்றுநோய்த் தடுப்பு மையம் மற்றும் மருத்துவக் கல்வி மையம் ஆகியவை இணைந்து கரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய ஆராய்ச்சியில், 11 நாட்களுக்குப் பிறகு கரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவுவதில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கரோனா பாதித்தவர்களை 11 நாள்களுக்குப் பிறகு தனிமைப்படுத்துவது என்பது தேவையற்றது என இந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இந்தப் புதிய ஆராய்ச்சி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு அந்நாட்டில் விரைவில் தனிமைப்படுத்துதலில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.