உலக நாடுகளை அச்சுறுத்தி ஆட்டம் போட்ட கரோனா என்ற சொல்லை அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. சீனாவின் வுகான் நகரை பிறப்பிடமாக கொண்டது என கூறப்படும் கரோனா வைரஸ் 2020 ஆம் ஆண்டின் ஆரம்ப கட்டத்தில் உலக நாடுகள் முழுவதும் பரவி சுமார் இரண்டு ஆண்டுகள் பொருளாதார முடக்கத்தை ஏற்படுத்தியதோடு, உயிரிழப்புகளையும் சந்திக்க வைத்தது. தற்பொழுது உலக அளவில் பாதிப்புகள் குறைந்து மெது மெதுவாக கரோனா என்ற சொல் மறைந்து வரும் நிலையில் தற்பொழுது கரோனாவின் பிறப்பிடமான சீனாவில் இருந்து வெளியாகியுள்ள தகவல் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் மீண்டும் கரோனா தொற்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்ட நிலையில் பல நகரங்களில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை மட்டும் 2 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பெய்ஜிங்கில் கம்யூனிஸ்ட் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் அங்கு பாதிப்பு பரவாமல் இருக்க தீவிர கண்காணிப்புகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இதனால் ரயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா வருவாய் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.