உலகையே அச்சுறுத்திவரும் கரோனா, கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவ தொடங்கி, அதன்பின்னர் படிப்படியாக உலகின் பெரும்பாலான நாடுகளுக்குப் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்துவருகிறது. இந்தநிலையில் தென் பசிபிக் நாடுகளில் ஒன்றான குக் தீவுகள், தங்கள் நாட்டின் முதல் கரோனா பாதிப்பை உறுதி செய்துள்ளது.
மீட்பு விமானம் மூலம் குடும்பத்தினருடன் நாடு திரும்பிய 10 வயது சிறுவனுக்குக் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக குக் தீவுகளின் பிரதமர் அறிவித்துள்ளார். குக் தீவுகள் சுற்றுலா பயணிகளைத் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கத் தயாராகிவந்த நிலையில், இந்தக் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுமார் 17,000 மக்கள் வசிக்கும் குக் தீவுகளில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியான மக்களில் 96 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.