வங்கதேசத்தின் சிட்டகாங் நகருக்கு அருகில் உள்ள சிதகுண்டா பகுதியில் உள்ள சேமிப்புக் கிடங்கில் கண்டெய்னர்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்பொழுதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. காயமடைந்தவர்களில் பலரின் உடல்கள் 60% முதல் 90% வரை தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தால் ஏற்பட்ட வெடிச்சத்தத்தால் அருகில் உள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறின. இதுகுறித்து உள்ளூர் கடைக்காரர் ஒருவர் செய்தியாளர்களிடம், மழை போல் தீப்பந்தங்கள் விழுந்ததாக தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்து பல மணி நேரங்களுக்குப் பிறகும் தீ எரிந்து கொண்டிருக்கிறது. ரசாயனங்கள் கடலில் கலப்பதை தடுக்க அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய நகரமான சிட்டகாங்கில் இருந்து 40கிமீ தொலைவில் சிதகுண்டா உள்ளது. கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நிகழ்ந்த தீவிபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டின் தொடக்கத்தில், தலைநகர் டாக்காவிற்கு அருகில் உள்ள ரூப்கஞ்சில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் இறந்தனர். சிட்டகாங்கிற்கு வெகுதொலைவில் உள்ள படேங்காவில் உள்ள மற்றொரு கொள்கலன் சேமிப்பு கிடங்கில் எண்ணெய் தொட்டி வெடித்ததில் 2020 ல் மூன்று தொழிலாளர்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.