உக்ரைன் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில், அந்நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் காமெடி நடிகராக நடிக்கும் செலென்ஸ்கி என்பவர் அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக மோசமான பொருளாதாரம், பிரிவினைவாதிகளுடனான உள்நாட்டு போர் என மோசமான சூழல்களை சந்தித்து வந்த நிலையில், தற்போது நடந்த இந்த தேர்தலில் இவர் வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய அதிபர் போரோஷென்கோ தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.
அரசியலில் பெரிய அனுபவம் இல்லாத 41 வயதான செலென்ஸ்கி, அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் அரசியல்வாதியாக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 ஆண்டுகளில் உள்நாட்டு போரில் 13,000 பேர் கொல்லப்பட்ட நிலையில், உள்நாட்டு போரை நிறுத்தி, பிரிவினைவாதிகளிடம் பிணை கைதிகளாக உள்ள 100 க்கும் மேற்பட்ட உக்ரைனிய பொது மக்களை மீட்பேன் என செலென்ஸ்கி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது அவரின் இந்த வெற்றிக்கு ஒரு மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது.