தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 15 நாட்கள் அரசு முறைப் பயணமாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான்ஸ்பிரான்ஸ்கோ விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை, சான்ஸ்பிரான்ஸிஸ்கோவின் இந்தியாவிற்கான துணைத் தூதர் சிரிகர்ரெட்டி மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளரும் அயலக தமிழர் நலவாரிய தலைவருமான கார்த்திகேய சிவசேனாதிபதி மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
இந்த நிலையில் இன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்றுவரும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரை நிகழ்த்தி வருகிறார். அதில், “வளர்ச்சி மிகுந்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 20 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. மனித வளங்கள் திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நவீன உள்கட்டமைப்பு திறன்மிகு பணியாளர்களால் உலக முதலீட்டாளர்கள் வெகுவாக ஈர்க்கப்படுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஏராளமான பெருநிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் திட்டங்களை நிறுவி உள்ளன. புதிய அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர வர வேண்டும். சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள தொழிலதிபர்களை நான் வரவேற்கிறேன்” என்றார்.
மேலும், சென்னையடுத்த சிறுச்சேரியில் ஆராய்ச்சி மையம் அமைக்க நோக்கியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் ரூ.450 கோடி நோக்கிய நிறுவனம் முதலீடு செய்வதன் மூலம் 100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” எனவும் தெரிவித்தார்.