
அமெரிக்காவில் பறந்த சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.
அமெரிக்காவில் பறந்து கொண்டிருந்த சீன உளவு பலூனால் பெரும் பதற்றம் நிலவி வந்தது. இது குறித்து சீனா கூறுகையில், அமெரிக்காவில் பறக்கும் பலூன் எங்களுடையது தான். அது சாதாரண வானிலை ஆய்வுக்காக பறக்க விடப்பட்டது. ஆனால் வழி தவறி அமெரிக்கா சென்று விட்டதாக சீன தரப்பில் கூறப்பட்டது.
அந்த பலூன் அமெரிக்காவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உட்பட பல்வேறு பகுதிகளின் மேல் பறந்து சென்றது. இந்நிலையில் இதுகுறித்து கூறிய அமெரிக்க முப்படைகளின் தலைமை தளபதி, “வானில் பறந்து கொண்டிருக்கும் சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்த நடவடிக்கை எடுக்கமாட்டோம். ஏனென்றால் பலூனில் இருந்து விழும் பொருட்களால் கீழ் இருக்கும் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். அந்த பலூனின் உளவு சேகரிக்கும் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உளவு பார்க்க ஏவப்பட்டதாக கூறப்பட்ட சீன பலூனை அட்லாண்டிக் கடற்பரப்பில் ஜெட் போர் விமானங்கள் மூலமாக அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இது தொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ள லாயிட் ஜஸ்டின், அமெரிக்க மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். இறையாண்மை மீறல்களுக்குத் தக்க பதிலடி தரப்படும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து கடலில் விழுந்த பலூன்களின் பாகங்களைத் தேடும் பணி நடைபெறுகிறது.