முதன்முதலில் கரோனா பரவிய நாடான சீனாவில், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அண்மைக்காலமாக அந்தநாட்டில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஜீரோ கரோனா அணுகுமுறையை பின்பற்றும் சீனா, கரோனா பரவும் பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து அதன் பரவலைக் கட்டுப்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் சீனா நேற்று, 35,700 பேர் வசிக்கும் எஜின் பகுதியில் ஊரடங்கை அமல்படுத்தியது. அப்பகுதியில் ஒருவாரத்தில் 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா உறுதியானதையடுத்து சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தநிலையில் இன்று, 40 லட்சம் மக்கள் வசிக்கும் லான்ஜோவ் நகரில் சீனா ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி லான்ஜோவ் நகர மக்களை அறிவுறுத்தியுள்ள சீன அதிகாரிகள், அவசர தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். அக்டோபர் 17 ஆம் தேதியிலிருந்து இன்றுவரை அந்த நகரில் 39 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து சீனா இந்த ஊரடங்கைப் பிறப்பித்துள்ளது.
சீனாவில் அக்டோபர் 17 முதல் இன்றுவரை 198 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. தற்போது சீனாவில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புக்கு டெல்டா வகை கரோனா காரணம் எனச் சீனா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.