இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு தொடர்ந்து மோசமான நிலையில் இருந்துவருகிறது. அதேபோல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை பிரச்சனை தொடர்ந்துவருகிறது. அதேநேரத்தில், சீனாவும் பாகிஸ்தானும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட்டுவருகின்றன.
இந்தச் சூழலில் சீனா, பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய மற்றும் அதிநவீன போர்க் கப்பல் ஒன்றை அளித்துள்ளது. இந்தப் போர்க் கப்பல் மூலம் தரையிலும், வானிலும் தாக்குதல் நடத்தலாம். மேலும், நீருக்கடியிலும் இந்தப் போர்க் கப்பல் மூலம் தாக்குதலை நடத்தலாம். அதுமட்டுமின்றி இந்த போர் கப்பலில் அதிநவீன கண்காணிப்பு வசதிகளும் உள்ளன. இந்த அதிநவீன போர்க் கப்பலுக்கு பி.என்.எஸ். துக்ரில் என பெயரிடப்பட்டுள்ளது.
சீனா ஏற்றுமதி செய்த மிகப்பெரிய மற்றும் அதிநவீன போர்க் கப்பல் இதுதான் என அக்கப்பலை வடிவமைத்த சீனா ஸ்டேட் ஷிப் பில்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் கூறியுள்ளது. இதேபோன்ற மேலும் மூன்று போர் கப்பல்களை சீனா பாகிஸ்தானுக்கு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.