மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநாடுகளின் முதலீட்டை ஈர்க்கும் வகையில் 12 நாள் அரசுமுறைப் பயணமாக துபாய் மற்றும் ஸ்பெயினுக்கு சென்றுள்ளார். செப்டம்பர் 23 வரை இந்த பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார் எனவும் தகவல்கள் வந்துள்ளன. மேலும், ஸ்பெயினில், மாட்ரிட் மற்றும் பார்சிலோனாவுக்கும் பயணப்பட்டு தொடர்ச்சியான வணிகக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, நவம்பர் 21-22 தேதிகளில் கொல்கத்தாவில் 7வது வங்காள உலக வணிக உச்சி மாநாடும் (பிஜிபிஎஸ்) நடக்கவிருக்கிறது.
இந்த நிலையில், மம்தா பானர்ஜி துபாய் விமான நிலையத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை தற்செயலாக சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, மம்தா பானர்ஜியிடம், “எதிர்க்கட்சி கூட்டணிக்கு (இந்தியா) தலைமை வகிக்க போகிறீர்களா” என்று கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த மம்தா, “இது மக்களை சார்ந்தது தான். அவர்கள் ஆதரித்தால் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வரலாம்” எனப் பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து ட்விட்டரில் மம்தா பானர்ஜி, “இலங்கையின் திறன்மிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, துபாய் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் என்னை சந்தித்தார். அப்போது என்னிடம் சில கலந்தாய்வு நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறும் அழைத்தார். அவர் அழைப்பு விடுத்தது என்னை நெகிழ வைத்தது. மேலும், கொல்கத்தாவில் நடைபெறும் 'பெங்கால் உலகளாவிய வணிக உச்சி மாநாடு 2023' இல் பங்குபெற அவரை அழைத்தேன். தொடர்ந்து அவர், என்னை இலங்கைக்கு பயணம் செய்யவும் கேட்டுக் கொண்டார். இந்த கலந்துரையாடல் இனிமையாகவும் அதேசமயம் ஆழமான சிந்தனையையும் ஏற்படுத்தியது” எனப் பதிவிட்டிருக்கிறார்.