எலிகளைப் பிடிக்க ரூ.1 கோடியே 38 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் எலிகளின் தொல்லை அதிகமாக உள்ள நகரங்களில் ஒன்று நியூயார்க். இந்த ஆண்டில் மட்டும் எலித் தொல்லைகள் எனக்கூறி 21,600 புகார்கள் மாவட்ட நிர்வாகத்திடம் குவிந்தது. அனைத்து இடங்களிலும் எலித் தொல்லைகள் அதிகரித்ததால் பொதுமக்கள் பொறுமை இழந்து மாநகர நிர்வாகத்திற்குக் கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நியூயார்க் நகர மேயர் எரி ஆடம்ஸ் எலிகளை ஒழிக்க புதிய பதவியினை உருவாக்கியுள்ளார். மேலும் இதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையையும் வெளியிட்டுள்ளார். எலிகளை ஒழிக்கும் பணிக்கு எலிகளை ஒழிப்பதற்கான இயக்குநர் எனும் பெயரை வைத்துள்ளனர். பணிக்கான தகுதிக் குறிப்புகளாக நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள், எலியைக் கட்டுப்படுத்தும் பணிக்கு புதிய உத்திகளை உருவாக்குபவர்கள் மேலும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியில் சேருபவர்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ஆண்டுக்கு 1 கோடியே 38 லட்சம் ரூபாய் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாத மதிப்பில் 11 லட்சத்து 50 ஆயிரம். இது குறித்த அறிவிப்பு வெளியானதும் நியூயார்க் நகர மக்கள் இது குறித்து கேலி வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.