Skip to main content

“இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான உறவை தொடர விரும்புகிறோம்” - கனடா பிரதமர்

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

 Canadian Prime Minister says We want to continue our constructive relationship with India

 

கனடாவில் உள்ள பயங்கரவாத புலிப்படைப் பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் மற்றும் ஆதரவு குழுக்களின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், பயங்கரவாத புலிப்படைப் பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார், கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட இவர், கடந்த 1997 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கனடா சென்று அந்நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார். இவருடைய படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதாகப் பயங்கரவாத தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது.

 

அதனைத் தொடர்ந்து, பயங்கரவாதி நிஜார் கொலைக்கு இந்திய உளவு அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகக் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். இதனையடுத்து, ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், கனடா தூதரக அதிகாரியிடம் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், கனடாவில் வாழும் இந்தியர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. 

 

இந்த நிலையில், வருகிற அக்டோபர் 10ஆம் தேதிக்குள் இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்ப பெற வேண்டும் என்று கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

 

இது குறித்து பத்திரிக்கையாளர்களைச் சந்துத்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, “ கனடாவுக்கு இந்தியாவில் தூதரக அதிகாரிகள் இருப்பது மிகவும் அவசியம். வெளிப்படையாக, நாங்கள் இப்போது இந்தியாவுடன் மிகவும் சவாலான நேரத்தை கடந்து வருகிறோம். நிலைமையை மேலும் தீவிரப்படுத்த விரும்பவில்லை. அதனால், இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான உறவை தொடர்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்