கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆரம்பம் முதல் அலட்சியம் காட்டிவந்த பிரேசில், கரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்திற்குச் சென்றுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் 53 லட்சத்திற்கு மேலானவர்களைப் பாதித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் 3.40 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். சிகிச்சைக்கோ அல்லது தடுப்பதற்கோ எந்தவித மருந்துகளும் இதுவரை அதிகாரபூர்வமாக கண்டறியப்படாத நிலையில், உலக நாடுகள் பலவும், தனிமனித சுகாதாரம், சமூக இடைவெளி உள்ளிட்ட அடிப்படை கூறுகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி இந்த வைரஸின் பாதிப்புகளைக் குறைத்து வருகின்றன. ஆனால், ஆரம்பம் முதலே கரோனா வைரஸ் தடுப்பில் மெத்தனமாகச் செயல்பட்டதன் விளைவைப் பிரேசில் தற்போது உணர ஆரம்பித்திருக்கிறது.
ஆரம்பம் முதலே சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வோ, ஊரடங்கோ எதுவும் பின்பற்றப்படாத நிலையில், தற்போது அந்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.32 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல இதுவரை அந்நாட்டில் 21,000க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அந்நாட்டில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை விட இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது மக்களைக் கவலையடைய வைத்துள்ளது. இதனையடுத்து பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரா கரோனாவை கட்டுப்படுத்த தவறி விட்டதாகக் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்,