பிரேசில் அதிபர் ஜேர் பொல்சோனரோவை தொடர்ந்து பொலிவியா அதிபர் ஜீனைன் ஆனெஜ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ள நிலையில், கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.5 லட்சத்தைக் கடந்துள்ளது. பல நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ள இந்த வைரஸ், பல உலக தலைவர்களையும் அடுத்தடுத்து பாதித்து வருகிறது. லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராசின் அதிபர் ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டசுக்கு கரோனா பாதிப்பு அண்மையில் உறுதி செய்யப்பட்டது, அதனைத்தொடர்ந்து பிரேசில் நாட்டின் அதிபர் ஜேர் பொல்சோனரோவுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்த வரிசையில் பொலிவியா நாட்டின் அதிபராகப் பதவியிலிருந்து வரும் ஜீனைன் ஆனெஜ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "எனக்கு நடந்த பரிசோதனையில் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. நான் நலமுடன் இருக்கிறேன். என்னைத் தனிமைப்படுத்தி கொண்டு தொடர்ந்து பணியாற்றுவேன். 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்ட பிறகு மற்றொரு பரிசோதனை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.