ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன. அதேபோல் ஆப்கானிஸ்தான் மக்களும் தலிபான்களுக்கு பயந்து, தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அதேபோல் ஆப்கான் பெண்களின் உரிமைகளும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் விமான நிலையத்தின் அருகே திடீரென குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இந்த திடீர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்திருந்தது. இந்நிலையில் தற்போது அந்த குண்டு வெடிப்பு நிகழ்வில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள், தாலிபான்கள், பொதுமக்களில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்தடுத்து இரண்டு முறை குண்டு வெடித்ததாக ரஷ்ய வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ஐ.எஸ் அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.