ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். ஜி20 மாநாடு துவங்க இரண்டே நாட்கள் இருக்கும் தருணத்தில், சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகம், குளோபல் டைம்ஸ், " நாட்டின் பெயரை மாற்ற யோசிப்பதை விட முக்கியமான விசயங்கள் இருக்கிறது" என அறிவுறுத்தி பரப்பரப்பை கிளப்பியுள்ளது.
இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற பாஜக அரசு முனைவதாகக் கூறி பல கருத்துகள், கண்டனங்கள் எழுந்தன. ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற கூற்றைப் பல வருடங்களாகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இம்மாதம் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்தியா எனும் பெயர் மாற்றப்படாது என தெரிவித்தார்.
இந்நிலையில், ஜி20 மாநாடு துவங்க இரண்டே நாட்கள் இருக்கும் தருணத்தில், சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகம், குளோபல் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், "இந்தியாவில் சமீபமாக பாரதம் பெயர் மாற்றம் விவகாரம் பேசப்பட்டு வருவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வரவிருக்கும் ஜி 20 உச்சிமாநாடு உலகளவில் கவனம் பெற்றிருக்கும் நேரத்தில், டெல்லி உலகிற்கு எதனை வெளிப்படுத்த விரும்புகிறது?.
தொடர்ந்து, 2022 டிசம்பரில் இந்தியா ஜி 20 தலைவர் பதவியை பெற்றபோது, ‘இந்தியா வகித்த ஒரு வருட ஜி 20 தலைவர் பதவி உள்ளடக்கமான, லட்சியமான, தீர்க்கமான மற்றும் செயல் சார்ந்ததாக இருக்கும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக ஊடக அறிக்கைகள் வெளிவந்தன. இந்தியா தனது ஜி20 தலைவர் பதவியை நாட்டின் சர்வதேச செல்வாக்கை அதிகரிக்க பயன்படுத்த விரும்புகிறது என்று தெளிவாக தெரிந்தது.
சமீபத்தில் நாட்டின் பெயர் மாற்ற பிரச்சனையும் எழுந்தது. இந்திய மக்கள் தங்கள் நாட்டை எப்படி வேண்டுமானால் அழைக்கும் சுதந்திரம் உள்ளது. இருப்பினும், பெயர் மிக முக்கியமான விஷயம் இல்லை. மாறாக, இந்தியா சுதந்திரம் அடைந்த 1947க்கு முன்பு இருந்த அதன் பொருளாதார அமைப்பு மறுபடியும் இந்தியாவால் முழுமையாகச் சீர்திருத்த முடியுமா என்பதுதான் முக்கியமே. இதுவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை மேம்படுத்துவதற்கும் முக்கியமாகும்.
மேலும், புரட்சிகர சீர்திருத்தம் இல்லாமல், இந்தியா புரட்சிகர வளர்ச்சியை அடைய முடியாது. இதனையடுத்து, இந்தியா 1991ல் பொருளாதாரத்தை தாராளமயமாக்கியது. அதுமுதல், பொருளாதார சீர்திருத்தங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் மோடி நிர்வாகம் லட்சிய நோக்குள்ள அரசாங்கமாக இருந்து வருகிறது. ஆனால், வர்த்தக பாதுகாப்புவாதத்தை நோக்கி இந்தியா அதிகளவில் மாறி வருகிறது. அதன் முந்தைய சில சீர்திருத்த நடவடிக்கைகளும் இதனால் முடங்கியுள்ளன. அடுத்து, 2014 ஆம் ஆண்டு மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர், இந்தியாவை எப்படி உற்பத்தி வல்லரசாக மாற்றுவது என்பது குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன. இதற்கான வழி என்பது, இந்தியா அதன் அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மேலும் தாராளமயமாக்க வேண்டும். சீனா உட்பட உலகம் முழுவதும் உள்ள நிறைய நிறுவனங்களுக்கு திறந்த, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முதலீட்டு சூழலை ஏற்படுத்த வேண்டும். சமீபத்தில் இந்தியா சில சீன நிறுவனங்களின் மீது கடுமையாக நடந்து கொண்டது. இதுவே, முதலீட்டாளர்களின் நம்பிகையை குறைத்துவிடும்.
இந்தியா டிசம்பர் 2022ல் இந்தோனேசியாவில் ஜி 20 தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டது. சில நாட்களிலே இந்தியா தனது முதல் ஜி 20 தலைவர்கள் உச்சி மாநாட்டைக் கூட்டவுள்ளது. இந்த நிலையில், இந்தியா ஜி20 தலைவர் பதவியைப் பயன்படுத்தி தனது பொருளாதாரத்தை சீர்திருத்துவதற்கும், அதன் வெளிப்படை தன்மையை விரிவுபடுத்துவதற்கும், வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நியாயமான வணிகச் சூழலை உருவாக்க வேண்டும். மேலும் படிப்படியாக இதனை செயல்படுத்த வேண்டும். நாட்டின் பெயரை மாற்ற வேண்டுமா என்பதை சிந்திப்பதை விட மேல் சொல்லப்பட்ட இவை அனைத்தும் முக்கியம்" என குளோபல் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
2020 ஏப்ரல்,மே-ல் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் கிழக்கு லடாக்கின் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.எ.சி) விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக கூறப்பட்டது. அதுமுதல், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மோசமடைந்தன. சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் மாநாடு 2023ல் சீன பிரதமரிடம் மோடி எல்லை விவகாரம் குறித்து பேசியதாக செய்திகள் வந்தன. இருந்தும், சீனா வெளியிட்ட புதிய வரைபடத்தின் காரணமாக பெரும் அதிர்வுகள் எழுந்தன. இந்த சிக்கல் காரனமாகத் தான் ஜி20 மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் டெல்லிக்கு வராமல் சீனப் பிரதமர் லீ கியாங் ஜி20 கலந்து கொள்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தது.