வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக வெடித்த போராட்டத்தின் காரணமாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், வங்கதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றார். இருப்பினும் ஆங்காங்கே கலவரம் நடந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இது வங்கதேசத்தையும் கடந்து பேசு பொருளாக மாறிய நிலையில் இந்தியா தனது கண்டனத்தையும் பதிவு செய்திருந்தது.
இதற்கிடையில், வங்கதேச கொடியை அவமதித்தாக கூறிய இந்து மத அமைப்பின் தலைவரான சின்மய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பில் உறுப்பினராக இருந்த சின்மய் கிருஷ்ணா தாஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், சம்மிலிதா சனாதானி ஜோட் என்ற இந்து அமைப்பின் செய்தி தொடர்பாளராக அவர் தொடர்ந்து பொறுப்பு வகித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், கடந்த மாதம் நடந்த இந்து மத ஊர்வலத்தின் போது, வங்கதேசத்தின் தேசியக் கொடி அவமதித்தாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து சின்மய் கிருஷ்ண தாஸ் உள்பட 19பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த 25ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரது கைதுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் சின்மய் கிருஷ்ண தாஸ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சின்மய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் வங்கதேசம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது நடந்த தாக்குதலில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 30க்கும் மேற்பட்டோரை வங்கதேச போலீசார் கைது செய்துள்ளனர். அதே வேளையில், சட்டோகிராமில் பிரங்கி பஜாரில் உள்ள லோகோநாத் கோயில், மான்சோ மாதா கோயில், மற்றும் ஹசாரி லேனில் உள்ள காளி மாதா கோயில் ஆகிய இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் செயல்படும் இஸ்கான் அமைப்பை தடை செய்யக்கோரி அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான மனுவில், சமீபத்திய பிரச்சனைகளால் நாட்டை சீர்குலைக்க காரணமாக இருக்கும் இஸ்கான் அமைப்பை நீதிமன்றம் தாமாக முன்வந்து தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த வழக்கு நேற்று (28-11-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதால் இஸ்கான் அமைப்பை தடை செய்ய உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது.