
வங்கதேசத்தில் 1971ஆம் ஆண்டில் நடந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க வங்கதேச அரசு முடிவு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் , வங்கதேச நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து போராட்டங்களில் பல பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஷேக் ஹசீனா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை இந்தியாவில் இருந்து உடனே நாடு கடத்த வேண்டும் என்று வங்கதேச அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால், தற்போது வரை மத்திய அரசு இது குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் சமூக வலைதளம் மூலம் வங்கதேச மக்களிடையே ஷேக் ஹசினா உரையாற்றினார். அப்போது, வங்கதேசத்தில் தற்போது அமைந்துள்ள தற்காலிக அரசுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்றார். அவர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போதே, டாக்காவில் உள்ள ஷேக் ஹசினாவின் தந்தையும், வங்கதேசத்தின் தந்தையுமான முஜிபூா் ரகுமானின் இல்லத்தை போராட்டக்காரர்கள் துவம்சம் செய்தனர். மேலும் ஆங்காங்கே பல இடங்களுக்கு தீ வைத்தனர்.
இந்த நிலையில் ஷேக் ஹசினா இந்தியாவில் இருந்து கொண்டு வங்கதேசத்தில் கிளர்ச்சியை தூண்டும் வகையில் பேசிவருவதாக கூறியுள்ள வங்கதேசத்தின் தற்காலிக அரசு டாக்காவில் உள்ள இந்திய துணைத்தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஷேக் ஹசினாவின் இத்தகைய நடவடிக்கை வங்கதேசத்திற்கு விரோதமாகவும், இந்தியா - வங்கதேச நாடுகளுக்கு இடையே இருக்கும் ஆரோக்கியமான உறவுக்கு தடையாகவும் உள்ளது என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.