உலகின் மிகப்பெரிய டைட்டானிக் பிரதியை ஆட்டிசம் எனும் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் வடிவமைத்து அசத்தியுள்ளான்.
ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ப்ரிஞர் கார்ல் பிர்கிஸ்ஸன். இவர் சிறுவயதில் இருந்தே ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு, இன்றும் அதே நிலையில் நீடித்து வருகிறார். தன்னை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் ஆட்டிசம் நோயில் இருந்து வெளிவருவதற்காக, லீகோ எனும் பிளாஷ்டிக் கட்டிகளை பயன்படுத்தி வந்துள்ளார். லீகோ என்பவை குழந்தைகள் வீடுகட்டி விளையாட பயன்படுத்தும் ஒருவகை விளையாட்டுப் பொருள்.
இந்த டைட்டானிக்கைக் கட்டி முடிக்க ப்ரிஞருக்கு கிட்டத்தட்ட 65 ஆயிரம் லீகோக்கள் தேவைப்பட்டுள்ளன. முதலில் 56 ஆயிரம் லீகோக்களால் டைட்டானிக் கட்டிமுடிக்கப் பட்டாலும், அதன் முன்பகுதி உடைந்து போனதை அடுத்து, புதிதாக வாங்கிய லீகோக்களையும் சேர்த்து 65 ஆயிரம் என ப்ரிஞர் கணக்கு காட்டுகிறார். மேலும், 120 பசை பாட்டில்களும் இதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளன.
இந்த டைட்டானிக் பிரதி ஐஸ்லாந்து, ஸ்வீடன், நார்வே, ஜெர்மனி என பல நாடுகளில் பார்வைக்காக வைக்கப்பட்டது. தற்போது அமெரிக்காவின் டென்னஸீயில் உள்ள டைட்டானிக் அருங்காட்சியகத்தில் இந்த பிரதி வைக்கப்பட உள்ளது. மேலும், வரும் ஏப்ரல் 21ஆம் தேதி ப்ரிஞர் அங்கு சென்று மக்கள் மத்தியில் பேச இருக்கிறார்.
‘நான் இன்னமும் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களைப் போல சாதாரணமானவனாக இருக்கவே முயற்சித்து வருகிறேன். இங்கு சாதாரணம் என்று எதுவெல்லாம் சொல்லப்பட்டாலும், அதுவாக இருக்கவே..’ என ப்ரிஞர் பேசியிருக்கிறார்.