இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி மூன்று லட்சம் பேருக்கு கரோனா உறுதியாகி வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனையடுத்து, இந்தியாவில் இருந்து தங்கள் நாடுகளுக்குள் கரோனா பரவாமல் தடுக்க, குறிப்பாக புதிய வகை கரோனா வைரஸ்கள் பரவல் தடுக்க, ஏற்கனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்குத் தடை விதித்துள்ளன.
தற்போது இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது. மே 15 வரை இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகள் விமானத்திற்கும் ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து புதிய வகை கரோனாக்கள் தங்கள் நாட்டில் பரவும் ஆபத்தைக் குறைக்கும் வகையில், இந்த தடை விதிக்கப்படுவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஏற்கனவே கரோனா பரவலைத் தடுக்க, இந்தியா உள்ளிட்ட கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து, சொந்த நாட்டிற்குத் திரும்பும் தங்கள் நாட்டு குடிமக்களின் எண்ணிக்கையைக் குறைக்கப்போவதாக ஆஸ்திரேலியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலியர்களும், தங்கள் நாட்டிற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.