சமகாலங்களில் சமூக வலைதளங்களின் செயல்பாடுகள் அபரிவிதமாக அதிகரித்துள்ளது. காலை கண்விழிப்பது முதல் இரவு தூங்கும் வரை நம் வாழ்வில் சமூக வலைதளத்தின் பயன்பாடுகள் ஏதோ ஒரு வகையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ள சமூக வலைதளத்தில் எந்த அளவிற்கு நன்மை இருக்கிறதோ, அதே அளவிற்குத் தீமையும் இருக்கிறது. சிறார் குற்றங்களுக்கு சமூக வலைதளங்களும் முக்கிய பங்காற்றுவதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் பேசுகையில், “செல்போன் மற்றும் சமூக வலைதள பயன்பாடுகளால் இளைஞர்கள் பலரும் பல்வேறு மன நல பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகள் செல்போன்கள், சமூக வலைதளங்களில் இருந்து விலகி நீச்சல் குளங்கள், விளையாட்டு மைதானம், பூங்கா உள்ளிட்டவற்றில் இருப்பதைப் பார்க்க விரும்புகிறேன். ஆகியால் குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை கொண்டு வர முடிவெடுத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.